4 July 2016

பொதுவான ராசிபலன்கள் நம்பகமானது தானா?

 
ஆம்.
கோள்களின் இயக்கங்கள் என்ன உணர்த்துகின்றன என்பது தான் ஜோதிடம்.  கோள்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு கோளும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அளவு எடுத்துக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக சந்திரன் இரண்டரை நாள், சனி இரண்டரை வருடம். இந்த இடமாற்ற விளைவுதான் விதிக்கப்பட்ட விதியின் விளையாட்டு.
 ஜெனன ஜாதகத்தை வைத்து வர்க்கச் சக்கரங்களின் உதவியுடனும் திசாபுத்தி அந்தரங்களின் மூலம் கணிக்கப்பட்டு கூறப்படுவது தான் ஜாதகப் பலன்கள். அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நம்பகமானது. இது நம்முடைய தனிப்பட்ட ஜாதக பலன்கள் ஆகும்.
 இன்று பத்திரிக்கைகளிலும், வார மாத நாளிதழ்களில் வரும் ராசிபலன்கள் என்பது சந்திரனை மையப்படுத்தி கூறப்படும் ராசி பலன். சந்திரன் மனோகாரகன். மனம் அது செம்மையானால் மந்திரங்கள் ஜெபிக்கத் தேவையில்லை. அந்த மனத்திற்கு காரகர் சந்திரன். நம்முடைய எண்ணங்களின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பது தான் பொதுவான ராசி பலன். மேலும் அன்றைய நடப்பு நட்சத்திரங்களின் பங்கு மிக முக்கியம். நட்சத்திரங்கள் இருக்கும் இடம் தான் சந்திரன் இருக்கும் இடம் அதனால் நட்சத்திரமும் சந்திரனும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
 இவற்றை வைத்துத் தான் பொதுப் பலன்கள் எழுதப் படுகின்றன. ஒரே ராசியில் கோடி பேர்கள் இருக்கிறார்கள். ஒரு வார்த்தையில் உள்ள பலன் அணைவருக்கும் ஒன்றாக அமையுமா? என்றால் அமையும். இராசிபலன்கள் ஒரு கிரகத்தைமட்டும் வைத்து கூறப்படுவதில்லை. ஒன்பது கோள்களின் நிலையையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் பலன்கள் கூறப்படுகின்றன. தினப்பலன்கள் கூட அன்றைய தினத்தில் அந்த ராசியில் பிறந்தோரின் மனோநிலையை அது பிரதிபலிக்கும்.  மனோநிலை என்பது என்ன? கோபம், ஏக்கம், மகிழ்ச்சி, துக்கம் இது போன்ற உணர்ச்சிகள் தான். இது அன்றைய தினத்தின் வெளிப்பாடாக இருக்கும். இது ஏறக்குறைய உண்மையாக இருப்பதால் தான் இன்று அனைத்து தொடர்பு சாதனங்களிலும் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.
 குருபெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் போன்ற பெயர்ச்சி பலன்கள் அந்தந்த ராசிக்குரிய கோச்சார நிலையை மையமாக வைத்து பலன்கள் கூறப்படுகின்றன. அட்டமத்து சனி நல்லது செய்யாது என்று இராசியை வைத்து மட்டும் கூறுவது சிறப்பல்ல. ஜெனன ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்து திசை புத்தி அந்தரம் நடத்தும் போது அட்டமத்து சனி விபரீத இராஜயோகத்தைக் கொடுக்கலாம்.
சாதகருடைய பலன்கள் முழுவதுமாக இதில் அடங்குவதில்லை. கோச்சாரப் பலன்கள் முழுவதும் ஜெனன கால ஜாதகத்தை வைத்தே பார்க்கப்பட வேண்டும். அப்பொழுது தான் அது சரியான தீர்வைத் தரும். அப்படியிருக்க இதற்கு ஏன் இந்த முக்கியத்துவம்?
 இது ஒரு முதலுதவி அதனால் தான் இந்த முக்கியத்துவம்.

No comments:

Post a Comment